காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.

வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
மாமனும்,மாமியும் இறந்ததைக் கேட்டு மனம் வருந்திய மருமகன், தன் உறவினருடன் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு வந்தான்.சில நாட்கள் சென்றதும்,"மாமன் பெண்ணை அழைத்துச்சென்று,மதுரையில் உள்ள சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி,
மாமன் தேடிய செல்வங்களையும்,மற்றவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.தன்னுடன் வந்த சுற்றத்தார்களை முன்னே போகுமாறு செய்துவிட்டு, தனது ஏவலர்களுடன் நாள் ஒன்றுக்கு,ஒன்றரை காததூரம் வழிநடந்து வந்து கொண்டிருந்தான்.திருப்புறம்பயம் என்ற ஷேத்திரத்தை அடைந்தபோது சந்தியாகாலத்தை நெருங்கவே,
இதற்கு மேல் பயணத்தை தொடர விரும்பாமல்,அன்றிரவு அங்கு தங்கிச்செல்ல எண்ணினான்.அந்தத் தலத்தின் ஆலயத்துக்கு அருகில் இருந்த கிணற்றில் நீராடிவிட்டு, வன்னி மரத்தடியில் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
ஆலயத்தினருகே படி ஒன்றின் மேல் தலைவைத்து உறங்கிய சமயம், கொடிய நச்சுப்பாம்பு ஒன்று வந்து அவனைக் கொத்தியதால்,விஷம் வேகமாக தலைக்கேறி வணிகனுடைய மருமகன் இறந்தான். ஏவலாளர்களும்,தோழியர்களும் புலம்பி அழ,மாமன் மகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்.
மணமாகாததால்,அவனைத் தீண்டாமல் ஒதுங்கி நின்று அழுதாள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட நல்வாழ்க்கை தன் கண்ணெதிரே கருகிப்போனதோடு,பழியும் தன் மேல் விழுமே என்று மாமன் மகள் அழுது அரற்றி கீழே விழுந்து மயங்கினாள்.பல சிவத்தலங்கள் தோறும் சென்று வணங்கிய திருஞானசம்பந்தர்,
அப்போது அவ்வூர் மடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒரு பெண் அழும் ஒலியை கேட்ட அவர்,விவரம் அறிந்ததும்,ஆலயத்தின் பக்கம் விரைந்து சென்று,வணிகப் பெண்ணைப்பார்த்து, “பெண்ணே!நீ யார்?” என்று பரிவுடன் கேட்டார்.அந்த வணிகப் பெண்ணும் அவரை வணங்கி,நடந்ததை எல்லாம் அவரிடம் கூறி,
தனக்கும் மதுரை வணிகனுக்கு ஏற்படவிருந்த திருமணத்தையும் பற்றியும் தெரிவித்தாள்.நிராதரவாக விடப்பட்ட அப்பெண்ணின் துயரைப் போக்க எண்ணிய சம்பந்தர்,உயிர் நீத்த வணிகனின் உடலருகே சென்று,அவனுடைய உடல் அமிர்த மயமாகும்படி ஈசனை நோக்கி பதிகம் ஒன்றை பாடியருளினார்.
சில நிமிடங்களில் கொடிய நஞ்சு உடலிலிருந்து இறங்கிச் சென்றவுடன்,இறந்து கிடந்தது வணிகமகன் புத்துயிர் பெற்று, உறங்கி கிடந்தவன் போல் எழுந்து உட்கார்ந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் இந்த அதிசயத்தைக்கண்டு, திருஞானசம்பந்தரை போற்றித் தொழுதனர்.
கன்னிப் பெண்ணும் பேருவகை அடைந்து சம்பந்தப் பெருமானை வணங்கி துதித்தாள்.வணிகக் கன்னி,மாமன் பெண்ணாக இருந்தாலும், தலைவன் இறந்தபோதும்,உயிர் பெற்றபோதும், அவனைத் தொடாமல் இருந்த நெறியையும், அன்பையும் கண்டு வியந்த திருஞானசம்பந்தர், மதுரை வணிகனைப் பார்த்து,
“வணிகனே!உனது மாமன் மகளான இத்திருமகள் மாதர் குல விளக்கு.எப்பொழுதும் உன் உடலை தீண்டும் தகுதிப்பெற்றவள். இவளை இங்கேயே திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஊர் செல்க”என்று கூறினார்.சம்பந்தரின் திருவாக்கை போற்றிய அவ்வணிகனும் “ஐயனே,தேவரீர் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கும்,
நல்லெண்ணத்திற்கும் நன்றி. ஆனால் தக்க சான்றுகளும் இல்லாமல் இப்படி ஏதோ ஒரு ஊரில் நான் எவ்வாறு மணம் செய்து கொள்வேன்?” என்று கேள்வி எழுப்பினான்.அதற்கு சம்பந்தர், “மகனே!இப்பெண் பிறக்கும்போதே,உன் மாமன் உனக்காகவே இவளை பேசியதை உறவினர்கள் அறிவார்கள்.எனவே கவலை வேண்டாம்.
இதோ இந்த வன்னியும்,கிணறும்,லிங்கம் இம்மூன்றையும் சாட்சிகளாக கொண்டு எனது பேச்சை தட்டாமல் திருமணம் செய்து கொள்வாயாக"என்று அருளினார்.சம்பந்தரையே ஆசிரியரும், நண்பரும்,தெய்வமும்,சுற்றமுமாகக் கொண்ட அவ்வணிகன் அந்த இடத்திலேயே முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு, விடைபெற்றுக் கொண்டான்.
ஏவலாளர்களும்,பெண்கள் கூட்டமும் உடன் வர, மதுரையை அடைந்தான்.உறவினர்கள்,அவன் மாமன் பெண்ணை அவன் திருமணம் செய்துக்க கொண்ட செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.காலாகாலத்தில் வணிகனின் இரு மனைவியரும், குமாரர்களைப் பெற்றுக் கொடுத்தனர்.வணிகன் மிக நலமாக வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் தெருவில் இரு மனைவியர்களுடைய குமாரர்களும் விளையாடிக்கொண்டிருந்தபோது,திடீரெனெ சண்டையில் மூத்தாளுடைய புதல்வர்கள் இளையவளுடைய மகனைக் கோபத்துடன் அடித்தனர்.இதன் காரணமாக இளையவளுக்கும் மூத்தாளுக்குமிடையேயான பேச்சு தடித்து, மூத்தவள் இளையவளை அவமரியாதையாகப் பேசியதுடன்,
“நீ எந்த ஊர்?எந்தக் குலம்?என் கணவனைக் கண்டு ஆசைப்பட்டு வந்த உனக்கு என்னை கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?நான் கட்டி வந்தவள்.உன்னைப் போல ஒட்டி வந்தவள் அல்ல.”என்றாள்.
இளையவள் தனக்கும் வணிகனுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றதை எடுத்துக்கூறினாள்.இருப்பினும் மூத்தவள் அதை ஏற்க மறுத்தாள்.
என் கணவனை அக்கினி சாட்சியாக மணம் செய்துகொண்டவள் என்பதற்கு சாட்சி இருந்தால் காட்டுக”என்று கடுமொழி கூறினாள்.
கற்பிலே சிறந்த இளையவள்,மிகவும் மனம் வருந்தி,"என் கணவர் பாம்பு கடித்து இறந்தபோது,உயிர் அளித்த திருஞானசம்பந்தரின் ஆணையால் என் கணவன் திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும்,
சிவலிங்கப்பெருமானும்,வன்னி மரமும்,கிணறும் காண திருமணம் செய்துகொண்டேன்.அந்த மூன்றும் தான் சாட்சிகள்”என்றாள்.
அதைக்கேட்ட மூத்தாள் சிரித்தாள்.நல்லது.வெகு அழகு.நல்ல சாட்சிகளாகத்தான் கூறினாய்.அந்த மூன்று சாட்சிகளும்,இங்கு வருமானால்,அதுவும் உண்மையாகத்தான் இருக்கும்”என்று ஏளனம் செய்தாள்
துன்பமடைந்த இளையவள்,"தெய்வமே!தாய்,தந்தை இழந்த பேதையான எனக்கு யார் துணை!மாமனாக வந்து வழக்குரைத்து, உரிமை வாங்கித்தந்த எம்பெருமானே!நீரே கதி.என்று மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தர பெருமானை எண்ணியவளாய், அன்றிரவு முழுவதும் சாப்பிடாமல் கிடந்தாள்.
மறுநாள்,ஆலயம் சென்று எம்பெருமானை வணங்கி “அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டபோது,சாட்சியாக இருந்த வன்னிமரமும், கிணறும்,சிவலிங்கமாகி தேவரீரும் இன்று இங்கு வந்து தோன்றி,என் மூத்தாளின் ஏச்சை நீக்கி,எளியவளைப் பாதுகாக்காவிடில் இறந்து விடுவேன்”என்று முறையிட்டாள்.
உடனே சோமசுந்தர பெருமாளை அருளால் எல்லாரும் பார்த்து வியப்படையும் வண்ணம்,திருமணம் ஆன காலத்தில், திருபுறம்பயத்தில் தலத்தில் இருநதபடியே மூன்று சாட்சிகளும் ஆலயத்தின் வடகிழக்கு திக்கில், விரைவாக வந்து சேர்ந்தன. சோமசுந்தரக் கடவுளுக்கு நன்றி சொன்ன இளையவள் உடனே ஓடோடிச் சென்று மூத்தாளையும்
அக்கம்பக்கத்தினர் சிலரையும் அழைத்து வந்தாள்.மீண்டும் சோமசுந்தர்ப் பெருமானை வணங்கிவிட்டு, “இது வன்னிமரம்! இது கிணறு!இது சிவலிங்கம்!இந்த மூன்றும் எனது திருமணத்துக்கு சாட்சியாக நின்றன” என்று சுட்டிகாட்டி கூறினாள்.
இளையவளாகிய வணிகப்பெண்ணின் கற்பின் சிறப்பையும், சிவபக்தியையும்,
சோமசுந்தரபெருமான் அவளுக்காக அருளியதை அறிந்த மக்கள் எல்லாரும் மிகுந்த ஆச்சர்யம் அடைந்து,மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை வணிகன்,தனது இளைய மனைவியின் கற்பின் சிறப்பால், ஆயுள்,ஆரோக்கியம்,ஐசுவரியம் ஆகிய எல்லாம், தருமமும், புகழும், ஓங்க, ஒழுக்கத்தில் சிறந்து திகழ்ந்தான்.

திருச்சிற்றம்பலம்🙏🏻

More from All

You May Also Like